இளைஞனே முடியுமா?

        
     இளைஞனே முடியுமா?

   காலைக் கதிரவன் கண்விழிக்கும் முன்னே
   கருங்குயில் கானம் காதினில் தேன்வார்க்க
   கண்விழித்தேன் காலைக் கடன் முடித்தேன்
   காரிருள் விலகிவரக் கால்வைத்தேன் தெருவளியே

  இருள் கொஞ்சம் நீங்கிவர சனநடமாட்டம்
  இருபதடி தூரத்தில் அலசப்படும் அரசியல்
  இருபாலர் சந்திப்பு கொச்சைவார்த்தைப் பேச்சு
  இத்தனையும் கடந்து வருகிறான் சூரியன்

  பள்ளி செல்லும் துள்ளும் இளங்கன்றுகள்
  பரவலாய், அலையோரம் தள்ளும் நுரைகளாய்
  பளிச் என்றுவர அவர்கள் வாயோரம் அசையுது
  பருவம்வரா விடலைக்காதலின் தெறிப்பொலிகள்

  பாடங்களில் கவனிப்பை தவறவிட்டு
  பாவாடை தாவணி போடா எதிர்ப்பாலரை
  பாடாய்ப்படுத்திட காதலுக்கு விளக்கம் தெரியா
  பாலகர் கூட்டம் தமக்குள்ளே போட்டிபோடுது

  கொஞ்சம் தள்ளி ஆசான்கள் சிலர்
  கொஞ்சும் தமிழில் கைத்தொலைபேசி காதுகளை
  கெஞ்சுகிறது, பதிலும் சேலையெனும் பெயரைஉடுத்தவரிடம்
  கொள்வனவு செய்யப்படுகிறது சில அடிதூரத்தினுள்

  பாடநேரம் பரீட்சை வினா கொடுத்துவிட்டு
  பாடாய்ப்படுத்தும் குறுந்தகவலில் சம்பாசனை-சூடு
  பறக்குது காதலனுடன் குடும்பம் நடக்குது
  பார்த்தெழுதுகிறான் மாணவன் பார்த்தும்பாராமல் ஆசிரியை

  துண்டு நழுவிவிழத் தூக்கித் தோளில் போட்டு
  துன்பம் சிறிது மனதைத் தாக்க நடக்கிறேன்
  துயரமிது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில்
  தூசிபடிந்த பக்கத்தைக் கடக்கின்றேன்

  வேர்க்கிழங்கு அடுக்குகளாய் சனக்கூட்டம்
  வேர்வை நாற்றம் காற்றுப் புகக்கூட இடமில்லை
  வேலைக்குப் போகும் அவசரத்தில் ஏற்றம்
  வேதனை நரகவேதனை தினமும் மினிபஸ்களில்

  கன்னிகள் பின்னே நெருக்கமாய் நிற்க
  காலம்கரையக் காத்திருந்து நெரிசல் பஸ்பிடித்து
  காசைக் கரியாக்கி களிகொள்ளும் கூட்டம்
  காரிகைகளை மட்டுமா? பாட்;டிகளையும் விடுவதில்லை
 
  வெற்றுக்கதை பேசி நாற் சந்திகளிலே
  வெற்றிலை பாக்குடன் தெருச்சண்டையும் நசிபட
  வெளிநாட்டு பயணம் நாளைவரும் நம்பிக்கையில்
  வெறுமையாய் காலங்களிக்கும் இளசுகள்

  மனதிற்கு அமைதிதேடி கோயிலை நாடினால்
  மனதைமயக்க நினைத்து நடமாடும் ஜன்னலினுள்
  மானத்தைக் கடைவிரித்து பொருட்காட்சி நடத்தும்
  மங்கையர் சாமிகளைக்கூட ஆசாமியாக்கி விடுகின்றனர்

  தெருநாய் கூட காலம் வந்தால்தான்
  தெருவோரம் சிலதுகள் எந்த நேரமும்
  தெரியாதோ? நாகரீகமாம் புதுசுகள்
  தெரி(ரு)விக்கின்றன பண்பாடு குப்பையாம்.
 
  முடித்து வைத்தேன், பயணத்தை முடித்துக்கொண்டேன்
  முற்றிலும் மாறிவிட்டது, உலகம் அழிவில் வீழ்ந்துவிட்டது
  முற்றம் தாண்டி எம்வீட்டினுள்ளும் நுளைந்துவிட்டது
  முடியுமா? இதைமாற்றி புதுஉலகம் படைக்க முடியுமா?

  நிச்சயம் முடியும்! இளைஞனே உன்னால்தான்
  நிலவினில்கால்வைத்த உன்னால் நிலஉலகை மாற்றமுடியாதா?
  நித்திய சோதனைகளில் வேதனைவரும் துவளாதே
  நினைத்துவிடு முடியுமென்று. நிச்சயம் ஓர்நாள் வெல்வாய்.

கருத்துகள் இல்லை: