வேண்டுதல்


                      வேண்டுதல்



    துள்ளித் திரிந்து துடிப்பாய்
    துணிந்து நிற்க
    தூணாகும் நல்ல
    குடும்பம் வேண்டும் - அங்கு

    தோளோடு தோள் தட்டி
    மடியிருத்தி கைகோர்த்து
   அனுபவ பாடம் நாடாத்தும்
   அன்பான தந்தை வேண்டும்

    சமைந்ததற்காய் ஒடுக்கி
    சாரமற்று வளர்காது
    சந்து பொந்தெல்லாம் புகுந்து
    நிமிர்ந்துவாழ வழிசொல்லும் தாய் வேண்டும்

   காலில் குத்தும் முள்ளை
   மெதுவாய்ப் பிடுங்கிவிட்டு
   கவனமாய் வாழச் சொல்லும்
   கனிவான அண்ணன் வேண்டும்

   அக்கா என அழைத்து
   அவ்வப்போது குறும்பாய்
   வம்பு செய்து சண்டைபோட
   துடிப்பான தம்பி வேண்டும்

   உள்ளம் சிதறுண்டு
   ஊமையாகும் காயங்களிற்கு
   மருந்தாக தோழி வேண்டும்
   மரணம் தொடும்வரை அவள் நட்பு
   மறையாது இனிக்க வேண்டும்

   தலை தொடும் துன்பத்தில்
   தோய்ந்து மனம் உடையும் வேளை
   தோழ் சாய்ந்து அழுது தீர்க்க
   தோழன் வேண்டும் - அவன்

   கற்பென்றால் உடல் என்ற
   கற்பனை விலக்கியவனாய் வேண்டும்
   அவன் கைகோர்த்து உலகை
   வலம்வர வேண்டும்

    நான் பார்க்க முகம் பார்த்து
    பார்வை விலக உடல் மேயும்
   ஈனமனங் கொண்ட ஆண்கள் நீங்கி
   பெண்ணென்ன ஆணின் கீழென்ற
   எண்ணத்தை விட்டொளித்து
   என் உள்ளத்தை காதல் செய்யும்
   ஆண்கள் எனை சூழ வேண்டும்


   சின்ன வீடு வேண்டும்
   அங்கு அரியணையிட்டு - நான்
   அழகாய் சின்னசின்ன சட்டம் வைத்து
   ராஜாங்கம் நடாத்திட வேண்டும்

   கூடிப் பிரிந்த பின்னும்
   கூட அணைத்து தலைகோதும்
   தலைவன் வேண்டும் - அவன்
   நாட்டிற்கு ராஜாவாய் நிற்கவேண்டும்
   வீட்டிற்குள் என் மடிதலைவைத்து
   தூங்கும் குழந்தையாய் மாறிட வேண்டும்

   செல்லமாய் முத்தமிட சிணுங்கி
   அடம்பிடித்து நெஞ்சில்
   பிஞ்சுக்காலால் எட்டி உதைத்திட
   வாரியணைத்து மகிழ
   மழலைச் செல்வம் வேண்டும்

   இறைவா இவை அனைத்தும்
   நீ தந்திட வேண்டும்
   தந்தபின்னே எப்போதும் நான்
   பெண்ணாக பிறந்திடல் வேண்டும்.


கருத்துகள் இல்லை: